Tuesday, May 31, 2011

நாம் எந்த பக்கம் ?

பங்கு வர்த்தக சந்தைகளை பற்றி எழுதுவோம் என்று நினைத்துதான் இந்த வலைதனைத் துவங்கினேன். எனினும் சிறிது நாட்களிலேயே அத்துறையில் அத்திசையில் எனக்கு இருந்த ஈடுபாடு குறைந்துவிட்டது. 

எப்போது பார்த்தாலும் கரடிக்கும் காளைக்கும் இடையே ஒரு போராட்டம். 

ஒரு நாள் இவர்கள் வெற்றி என்றால் அடுத்த நாள் அவர்களுக்கு கொண்டாட்டம். 

சற்று யோசித்துப்பார்த்தால், மனித வாழ்வே இது போலத்தானே. 

ஒரு நாணயத்துக்கு இரு பக்கங்கள் போலே, .உலகத்திலே இரு வேறான மக்கள்  எப்போதுமே இருக்கிறார்கள். எல்லாத்துறையிலுமே. அரசியல், கல்வி, மருத்துவம், சட்டம், சுகாதாரம், வணிகத்துறையிலும்,   நாணயமாய் பொருள் ஈட்டும் நபர்கள் ஒருபக்கம் என்றால் பொதுப் பணத்தை அவர்கள் அறியா வண்ணம் கொள்ளை அடிக்கும் இன்னொரு கூட்டம். மருந்துகள் தயாரிப்பதிலே அதை விநியோகிப்பதில் ஏற்படுகின்ற தில்லு முல்லுகளைப் பார்த்து நெஞ்சம் கொதிக்கின்றது இல்லையா ? மாம்பழத்தில் கூட அதை பழுக்க வைப்பதில் கார்பைட் கலந்து அதை சீக்கிரம் பழுக்கவைத்து விற்பனை செய்து மக்களுக்கு இன்னல் ஏற்படுத்தும் ஒரு கூட்டம். பாலில் கலப்படம் செய்யும் இன்னொரு கூட்டம்.

தனியார் மருத்துவகங்களில் தேவையே இல்லாத சோதனைகளைச் செய்யச்செய்து உடல் நலம் குறைந்தவருக்கு அது போதாது என்று அவர்கள்  மன நலத்தையும் கெடுக்கும் உக்தி சொல்வோர் அரை குறை மருத்துவர் ஏராளம்.  பொதுவாக, மருத்துவர்கள், ஒரு மருந்து தரும்போது அது ஏற்படுத்தும் பின் விளைவுகளைப் பற்றி சொல்வதில்லை. ஒரு அறுவை சிகிச்சை  செய்யும்போது அதன் பக்க விளைவுகளைப் பற்றி குறிப்பிடுவதில்லை.  விவரங்கள் கேட்டால் அதை சொல்வதற்கு மருத்துவர்களுக்கு நேரமும் இல்லை. பொறுமையும் இல்லை.

வணிகத்தை எடுத்துகொண்டால், எந்த பொருளை விற்பனை செய்தாலும், விற்பனை செய்யும்பொழுது அதில் இருக்கும் குறைபாடுகளை பற்றி சொல்வது இல்லை. அதனால் ஏற்படும் வருடாந்தர  செலவினங்களைப் பற்றி, மற்றும்  விற்பனை செய்யப்படும் பொருளின் சராசரி ஆயுள் என்ன என்று சொல்வதில்லை. இவற்றில் வீட்டுக்கு தேவையான எல்லாமே அடக்கம்.

பொதுவாக, பொது வாழ்வில், நாநயம் பெருகி இருக்கிறது. ஆனால், நாணயம் குறைந்து விட்டது. மனித நேயம் மக்களுக்கு மறந்து விட்டது போலும் !!!

  மனித நேயத்தைக் காக்க வேண்டிய ஆன்மீக வாதிகளும் இரண்டு பட்டு நிற்கிறார்கள். சத்தியத்தைக் காக்க வேண்டியவர்களும்,  தர்மத்தை நிலை நிறுத்த வேண்டியவர்களும், சத்யம் வத, தர்மம் சர என்னும் விதிகளுக்கு உட்பட்டு நடக்கவேண்டியவர்களும்,   சொல் ஒன்றும் செயல் ஒன்றுமாய் நடக்கக் கண்டு, இவர்களையா நாம் மகான் என்று நினைத்தோம் என  பொது மக்கள் வேதனைப் படுவதையும் பார்க்கிறோம். 
          

  அவ்வப்போது தீங்கு செய்வோரைப் பற்றியும் அவர்கள் தண்டிக்கப்படுவதைப் பற்றியும் செய்திகள் வருகின்றன. ஆனாலும் தீமை குறைவதாக தெரியவில்லை. 

  நல்லவைக்கும் தீயவைக்கும் இடையே ஒரு போர் நிகழ்ந்துகொண்டே தானே இருக்கிறது. உடலிலே நல்ல பாக்டீரியா, கெட்ட பாக்டீரியா தொடர்ந்து இருப்பது போலே மனிதனின் உள்ளத்திலும் நல்ல எண்ணங்களும் கெட்ட எண்ணங்களும் தொடர்கின்றன. அது போலே உலகத்திலும் நல்லவர்களும் கெட்டவர்களும் ஒரு தொடர் சீரியல் போல இருந்து கொண்டே இருக்கிறார்கள்.

     காலப்போக்கில், நல்லது என்றால் என்ன கேட்டது என்றால் என்ன என்பதன் பொருளே மாறி வருகின்ற நிலைமை.

     பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை. அருள் இல்லார்க்கோ அவ்வுலகம் இல்லை என்றார் வள்ளுவர்.  அதைப் பிறகு பார்த்து கொள்ளளலாம் என்று இன்றைய மாந்தர் நினைக்கிறார். 
  
  அல்லவை நீங்க வேண்டும் நல்லவை நடக்க வேண்டும் என வேண்டுவோர் ஒரு பக்கம். 

   அல்லவை கொண்டு வரும் பொருளில் மயங்கி அதன் பால் தன மனசாட்சிதனை அடகு வைத்து பொருள் ஈட்டுவோர் இன்னொரு பக்கம். 

   அல்லவைதனை எதிர்த்து போராட வேண்டும் என நினைப்போர் இன்னொரு பக்கம்.  நினைப்போடு இல்லாமல், சொல்லிலும் செயலிலும் அதை வலிந்து முனைப்போடு இருப்போர் கடைசி பக்கம். 

   நாம் எந்த பக்கம் ?